
பழம்பெரும் பின்னணி பாடகரும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகின் மிக மூத்த கலைஞருமாகத் திகழ்ந்த டி. எம். செளந்தரராஜன் சற்று நேரத்துக்கு முன் இயற்கை எய்தினார்!
இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார்.ஆயினும் இன்று சனிக்கிழமை தனது வீட்டில் காலமானார்.அவருக்கு வயது 91.தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார். 1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார்.எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், நாகேஸ்வரராவ் உள்ளிட்ட பழம் பெரும் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார்.
பத்ம ஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள சவுந்தரராஜன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி சடங்கு நாளை (26.05.13) நடைபெறுகிறது


